குழந்தைப்பேறுக்காக மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள ஆயுள் தண்டனைக் கைதிக்கு 15 நாள்கள் பரோல் வழங்கியிருக்கிறது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம். ஒரு பெண்ணுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்தரிக்கும் உரிமையின் அடிப்படையில் கோரப்பட்ட இந்த பரோலுக்கு இந்த அனுமதியினை வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இதே போன்று ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. `கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் தன் கணவருடன் தாம்பத்திய உறவு கொண்டு கருத்தரிக்க வேண்டும்’ என அக்கைதியின் மனைவி கோரினார். ஆனால், அவருக்கு பரோல் வழங்க மறுத்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
`சாமானிய மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாது’ என்று அதற்கு காரணம் தெரிவித்தது நீதிமன்றம். இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்…
“நிச்சயமாக இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. கண்ணியத்தோடு வாழ்தல் மற்றும் தாய்மையடைதல் ஆகியவை பெண்ணின் அடிப்படையான உரிமைகள். அந்த உரிமைகளை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. இந்திய குற்றவியல் சட்டத்தின் நோக்கம் குற்றம் செய்கிறவர்களை சீர்திருத்துவதா அல்லது கொடூரமாக தண்டிப்பதா என்பது இங்கு எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அத்தண்டனை அவர்களை சீர்திருத்துவதாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கும் அடிப்படையான மனித உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
உலக அளவில் எடுத்துக்கொண்டால் ஐரோப்பிய நாடுகளில் குற்றவாளிகளுக்கு நிறைய உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. காலை முதல் மாலை வரை கைதி வெளியுலகில் இருந்து விட்டு மாலை சிறைக்கு வந்துவிட வேண்டும் என்கிற Open prison முறை கூட அங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் தாய், தந்தை ஆகியோரின் இறப்புக்காக மட்டுமே பரோல் வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில் தனக்கான சந்ததியை உருவாக்க பரோல் வழங்குவதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
ஆயுள் தண்டனைக் கைதி 14 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியே வரும்போது தனக்கென ஒரு குழந்தை இருப்பதைக் கருத்தில் கொண்டு திருந்தி வாழ வாய்ப்பாகவும் இருக்கும். ஆயுள் தண்டனை பெற்றாலும் தன் கணவனுடனே வாழ்க்கையைத் தொடர விரும்புகிற பெண், குழந்தை பெற்றுக்கொண்டு அக்குடும்பத்தை உருவாக்க இந்த தீர்ப்பு வழிவகை செய்யும்.
குற்றவாளிகள் கடைசிவரை குற்றவாளிகளாகவே இருப்பார்கள் என்பது தவறான கருத்து. அவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பாகவே இதனைப் பார்க்க வேண்டும். உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்கப்படாத அனைத்து சிறைக்கைதிகளுக்கும் அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.” என்கிறார் அஜிதா.
குற்றவாளிக்கு தாம்பத்ய உறவுக்காக பரோல் வழங்கப்படுவது மனித உரிமை என்றால் வாக்களிக்கும் உரிமையையும் வழங்கலாமே என அத்தீர்ப்புக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் மானுடவியல் ஆய்வாளர் மோகன் நூகுலா. “ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆயுள் தண்டனையை அனுபவிப்பவர்கள் நிச்சயம் பெருங்குற்றத்தை இழைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளைக் கூட பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள், கொலை செய்தவர்கள் என சமூகத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டவர்களைத்தான் நாம் குற்றவாளிகள் என்று சொல்கிறோம்.
பலகட்ட விசாரணைக்குப் பிறகு குற்றம் உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அப்படியிருக்கையில் சாமானிய மனிதர்களைப் போல குழந்தை பெற்றுக்கொள்ள மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுவது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். சிறையில் இருந்து கொண்டே தனக்கான சந்ததியை உருவாக்கும் சுதந்திரம் ஒரு கைதிக்கு வழங்கப்படுவது அக்குற்றத்தை ஆதரிப்பதற்கு ஈடானது. பெண்ணின் உரிமை என்கிற அடிப்படையில் பார்த்தால்கூட சமூக அறத்துக்கு எதிரான ஒரு செயலை அங்கீகரிக்க முடியாது” என்கிறார் மோகன்.