வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம் : ”கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தினசரி அனுப்பவில்லை,” என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ள குற்றச்சாட்டை, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மறுத்துள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.நாட்டில், கொரோனா பாதிப்பு துவங்கியது முதல், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தினசரி பரிசோதனை, பாதிப்பு, இறப்பு, குணமடைந்தோர் உள்ளிட்ட தகவல்களை, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் வழங்குவது வழக்கம். இதன் அடிப்படையில், கொரோனா நிலவரம் குறித்த விபரங்கள் வெளியிடப்படும். இந்நிலையில், இந்த விபரங்களை, 13ம் தேதி முதல், ஐந்து நாட்களுக்கு மத்திய சுகாதாரத் துறையிடம் கேரள அரசு வழங்கவில்லை என தெரிகிறது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கேரள சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராஜன் கோப்ரகடேவுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், ‘தினசரி பாதிப்பு உள்ளிட்ட விபரங்களை அனுப்பாததால், நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு, சிகிச்சை பெறுவோர் குறித்து வெளியான விபரங்களில் தவறு ஏற்பட்டு உள்ளது. ‘நாட்டில் தினசரி வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 90 சதவீதம் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாக, தினசரி பதிவுகளை நீங்கள் அனுப்பாதது முக்கிய காரணம்’ என கூறப்பட்டு உள்ளது.
இந்த குற்றச்சாட்டை, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மறுத்துள்ளார். இது குறித்து, அமைச்சர் நேற்று கூறியதாவது: கொரோனா பரிசோதனை, பாதிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாநிலத்தில் வெளியிடுவதை மட்டுமே நிறுத்தி உள்ளோம். ஆனால், அனைத்து விபரங்களையும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தினசரி தவறாது அனுப்பி வருகிறோம். எனவே, எங்கள் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement