புதுடெல்லி: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நெய்வேலி அதிகாரிகள் பங்கேற்றனர். நாட்டில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தேவை அதிகரித்துள்ளதால் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் 10 மாநிலங்களும், மின் தட்டுப்பாட்டால் 12 மாநிலங்களும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.இதுகுறித்து மகாராஷ்டிர மின்துறை அமைச்சர் நிதின் ராட் கூறுகையில், ‘மின் பற்றாக்குறையை குறைக்க மைக்ரோ-லெவல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தால், மகாராஷ்டிராவில் கடந்த 6 நாட்களாக மின் பற்றாக்குறை இல்லை. மின் தட்டுப்பாடு கிட்டத்திட்ட 15 சதவீதம் குறைந்தது. ஒரு லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மாநில அரசு டெண்டர் விடுத்துள்ளது. ரேக்குகள் (ரயில்கள்) பற்றாக்குறையால் நிலக்கரி வந்து சேர்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. ஒரு நாளைக்கு 37 ரேக்குகள் தேவை; ஆனால் 26 ரேக்குகளில் மட்டுமே நிலக்கரி கிடைக்கிறது. ஒவ்வொரு ரேக்கின் மூலம் 4,000 மெட்ரிக் டன் நிலக்கரியை கொண்டு செல்ல முடியும்’ என்றார். மகாராஷ்டிராவை போன்று தலைநகர் டெல்லியிலும் மின்தேவை அதிகரித்துள்ளது. இதுகுறித்து டிஸ்காம் அதிகாரிகள் கூறுகையில், ‘கோடை வெப்பம் காரணமாக ெடல்லியில் 5,735 மெகாவாட் மின்சாரம் தேவை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 28 சதவீதத்திற்கும் அதிகமாக மின்தேவை அதிகரித்துள்ளது. அப்போது மின் தேவை 4,469 மெகாவாட்டாக இருந்தது. முன்னதாக 2019ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கணக்கெடுப்பின்படி அன்றைய மின் தேவை 5,664 மெகாவாட்டாக இருந்தது. மின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பலமாநிலங்களில் மின்தட்டுப்பாட்டு பிரச்னைகள் இருப்பதால், நாட்டில் நிலக்கரி இருப்பு மற்றும் மின் உற்பத்தி நிலவரம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர், கேபினட் செயலர், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சிஎம்டி, நிலக்கரி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்கண்ட கூட்டத்தில், மாநிலங்களில் நிலக்கரி இருப்பை அதிகரிக்கவும், சப்ளையை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நிலக்கரி பற்றாக்குறை குறித்து சில மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதால் தற்போது அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.