கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் வியாழக்கிழமை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, சசிகலாவிடம் நாளை (வியாழக்கிழமை) விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தனிப்படை போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோடநாடு வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதுவரை மேற்கண்ட வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விவரங்களை அறிய முடிவு: இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை பெற சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா, எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலருக்கே தெரியும். எனவே, கோடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன. அதிலிருந்து கொள்ளைச் சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பது போன்றவை குறித்து சசிகலாவிடம் விசாரித்து தகவல்களை பெற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படை போலீஸார் 21-ம் தேதியன்று நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். கோவையில் விசாரணை மேற்கொண்டு வரும் நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார்,சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று நாளை (ஏப்.21) விசாரிக்க உள்ளனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் கூறும்போது,‘‘ கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலாவிடம் நாளை (ஏப்.21) சென்னையில் விசாரணை நடத்தப்பட உள்ளது,’’என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.