ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரை நினைவுகூர்ந்து காலிமுகத்திடலில் போராட்டமொன்று இடம்பெற்றது.
அத்துடன், உயிரிழந்த நபருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். காலி முகத்திடல் மக்கள் போராட்டம் இன்று 12வது நாளாக நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத்தரும் மக்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் 2022ம் ஆண்டுக்கான ஒலிவியர் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஹிரன் அபேசேகர நேற்று இரவு காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட உதவிகள் மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக சட்டத்தரணிகள் பலரின் பங்குபற்றலுடன் விசேட வேலைத்திட்டம் இன்று போராட்ட களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் போராட்ட களத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.