தேசிய மட்டத்திலான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தயாராகும் வகையில் இந்திய கரையோர காவல் படையால் 2022 ஏப்ரல் 19 முதல் 27 ஆம் திகதி வரை கோவாவில் NATPOLREX-VIII பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளின் கப்பல்களும் பிரதிநிதிகளும் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.
2. சமுத்திர சூழலை பாதுகாப்பதற்கும் அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒன்றிணைந்த முயற்சிகளை வலுவாக்கும் இலக்குடன் பன்முகப்படுத்தப்பட்ட ஈடுபாட்டின் ஊடாக பிராந்திய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்காக இலங்கை கரையோர காவல் படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பல் இந்த மாசு கட்டுப்பாட்டு பயிற்சிகளில் பங்கு கொள்கின்றது.
3. இலங்கையின் சமுத்திர சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த எம்.டி.நியூ டைமண்ட் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் தொடர்பான சம்பவங்களின் பின்னணியில் சுரக்ஷா கப்பல் இப்பயிற்சிகளில் பங்கேற்று விசேட முக்கியத்துவத்தினை பெற்றுக் கொண்டிருந்தது. இலங்கையைச் சேர்ந்த கடற்படையினருடன் இணைந்து இந்திய கடற்படையும் கரையோர காவல் படையும் மேற்கொண்டிருந்த ஒன்றிணைந்த முயற்சியின் காரணமாக இச்சம்பவங்களின்போதான பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
4. கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகித்தல், திரவநிலை மருத்துவ ஒட்சிசன் விநியோகம், நனோ நைதரசன் உரங்கள் வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு முதலில் பதிலளித்து செயற்பட்ட நாடாக இந்தியா உள்ளமை நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும். அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற இலக்கினை மேம்படுத்துவதற்காக இலங்கை உட்பட பல்வேறு நட்பு நாடுகளுடன் பெறுமதியான அனுபவங்களை பகிர்ந்து கட்டமைப்பு ரீதியான ஒன்றிணைவை உருவாக்குதல் மற்றும் இந்திய கரையோர காவல் படையின் தயார் நிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய பல்வேறு செயற்திட்டங்கள் இந்தியாவால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு
19 ஏப்ரல் 2022