சட்டசபை ஹைலைட்ஸ்: ஆளுநர் பாதுகாப்பு குறித்து விவகாரம்; அதிமுக வெளிநடப்பு… முதல்வர் வருத்தம்

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முதல்வர் விளக்கம் அளித்தார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கால தாமதம் செய்வதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்ரல் 19) மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை வீசினர். இந்த சம்பவத்தால், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையா என்று பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 20) ஆளுநருக்கு கருப்புகொடி காட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரம் குறித்த பிரச்னையை எழுப்பினார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு, இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“ஆளுநரின் வாகனம் வரும் வழியிலேயே போராட்டத்திற்கு அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடத்தியவர்களை முன்னதாகவே அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி” என்று கூறினார்.

இதனிடையே, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தபோது, ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டிய விதத்தைப் பற்றியும் பாதுகாப்பு விவகாரம் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்கள், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் ஆகியோர் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.

அதாவது, நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கின்றபோது, அதற்குரிய பதிலை அவர்கள் பொறுமையாக இருந்து கேட்டு, அதிலே அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால், வெளிநடப்பு செய்யட்டும்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அதுதான் மரபு. ஆனால், அவர்களுக்கே தெரிந்துவிட்டது. இதிலே பதில் சொல்கிறபோது, நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்று சொல்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைத்தான்செல்வப் பெருந்தகை அவர்கள் மிக விளக்கமாக இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் நேற்றையதினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்திருக்கலாம்; தொலைக்காட்சிகளிலும் கேட்டிருக்கலாம். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அவர்களுடைய கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல, A.D.C. to the Hon’ble Governor of Tamil Nadu அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். Official-ஆக அவர் நம்முடைய Director General of Police (DGP)-க்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலே அவர் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது, “fortunately, Hon’ble Governor and the convoy passed unarmed”. அதாவது, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஆனால், இதுதான் நமக்கு chance; இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக, அ.தி.மு.க.-விலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். இங்கேயிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அவர்கள் அவருடைய அறிக்கையிலே கடைசியாக, ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய இந்த விடியா அரசினுடைய முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

அதேபோல, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் தனியாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாகச் சொல்வது; இன்னும் soft-ஆகச் சொல்லியிருக்கிறார். ‘மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது நியாயமாக இருக்கிறது.

அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவராக இருக்கக்கூடிய ஐ.ஜி. தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி.-க்கள், 6 எஸ்.பி.-க்கள், 6 கூடுதல் எஸ்.பி.-க்கள், 21 டி.எஸ்.பி.-க்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன; கொடிகள் வீசப்பட்டன என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.

ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அது நடக்கவே நடக்காது, இது தி.மு.க. ஆட்சி. சாத்தான்குளத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம். அந்தச் சம்பவத்தைப் பற்றி அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியவில்லையே என்று சொன்னார். அப்படிச் சொன்னவர்தான் இவர். ஆனால், இன்றைக்கு இவர் சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி அவர்களுக்கு என்ன நடந்தது? நான் அதற்குள் அதிகம் போக விரும்பவில்லை. திண்டிவனத்தில் 10-4-1995 அன்று, ஆளுநர் சென்னாரெட்டியும், அவரது கான்வாயும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே மறிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது யாருடைய ஆட்சியில்? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் 4 பேர் தலைமையில் சரமாரியாக கல் எறிந்திருக்கிறார்கள்; முட்டையை வீசியிருக்கிறார்கள்; தக்காளியை வீசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சென்னா ரெட்டி உயிர் தப்பினார்” என்று அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்தது. இது யாருடைய ஆட்சியில்?

தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்று இதே அவையில், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு தனித் தீர்மானமே கொண்டுவரப்பட்டது என்று இங்கே சட்டமன்றக் காங்கிரஸ் கட்சி தலைவர் கு. செல்வப் பெருந்தகை அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நாவலர் அவர்கள்தான் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, அது இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், ‘சென்னாரெட்டி உயிர் தப்பினார்’ என தலைப்புச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. தாக்குதலுக்கு உள்ளான ஆளுநர் அவர்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று 26-4-1995 அன்று இதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது யாருடைய ஆட்சியில்?

ஆளுநர் மட்டுமல்ல; மிகப் பெரிய சட்டப் பதவியில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மறைந்த டி.என். சேஷன் அவர்கள் தாஜ் ஓட்டலிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியினுடைய சாதனைகள். விமான நிலையத்திலிருந்து விரட்டியடித்து, அவர் சென்னையில் இருக்கக்கூடிய தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு வந்த பிறகு, அந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? அவர்கள் ஆட்சியில்தான்.

ஏன்; இன்றைக்கு பா.ஜ.க.-வில் ஒரு முக்கியஸ்தராக இருக்கக்கூடிய டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்த முயன்று, அவரை அசிங்கப்படுத்திய ஆட்சி உங்களுடைய ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி; சந்திரலேகா அவர்கள்மீது ஆசிட் வீசிய ஆட்சி, யாருடைய ஆட்சி? எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றன.

எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில், நான் தெளிவாக, உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைத் தடுத்திருக்கிறது. ஆளுநர் அவர்கள் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவர்களைக் காப்பாற்ற, அவர்களுக்குரிய பாதுகாப்பினை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தக் கடமையைக் காவல் துறை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று- இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தி போகும் என்ற காரணத்தினால்-எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களையும் நான் மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இதுகுறித்து இந்த விளக்கமே போதும் என்று கருதி, நான் அமைகிறேன்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீது விவாதமும் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிப்புகள்:

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டது. காடாம்புலியூரில் 29 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே லிங்கம் பட்டியில் ரூ. 25 கோடி மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார். ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் மகளிருக்கான பொது வசதி மையம் அமைக்கப்படும் என்றும், ரூ. 3.75 கோடி மதிப்பு பொது வசதி மையம் உயர் தொழில்நுட்ப விசைத்தறி ஆகிய வசதியுடன் அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.

கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில் ரூ. 4.70 கோடியில் புதிய தனியார் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 11.40 ஒரு ஏக்கரில் ரூ. 3.50 கோடி அரசு மானியத்துடன் அனைத்து தானியங்கி வாகன சேவை குழுமம் மூலம் தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

போதிய இட வசதி இன்றி செயல்படும் தானியங்கி வாகன சேவை கூட்டங்களை நகருக்கு வெளியே மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அலுமினிய அச்சு வார்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதனால், 3000 தொழிலாளர்களுடன் இயங்கும் 1000 அலுமினியம் நிறுவனங்களுக்கு பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி கிராமத்தில் அலுமினியக் அச்சு வார்ப்பு தொழிலுக்கான ரூ. 5.75 கோடியில் பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.

தமிழக சட்டப் பேரவையில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி, சென்னையை அடுத்த திருமழிசையில் ஆயிரத்து ரூ. 280 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் வெளியான அறிவிப்புகள்:

  1. நடப்பு நிதியாண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.
  2. நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
  4. நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தினை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச்சங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
  5. அடுக்குமாடி குடியிருப்புதாரர்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்துக்குள் சுலபமாக செலுத்த வழிவகை செய்யப்படும்.
  6. பயனாளிகள் திறன் மற்றும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வகையில் பல்வேறு தரைபரப்பளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோளரங்கம் பற்றி கேளுங்க என்றால் கோளாறான கேள்வி எல்லாம் கேட்கிறீங்க – சபாநாயகர் அப்பாவு கம்மெண்ட்டால் சிரிப்பலை

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கந்தவர்ககோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை மற்றும் மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தங்கள் தொகுதிகளுக்கு கோளரங்கம் வேண்டும் எனக் கோரி கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு உயர்கல்வில்துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர், கோவிந்தசாமி மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என கேட்டார். கோளரங்கம் பற்றிய கேள்வியின் போது மாணவர்கள் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் கேட்டது குறித்து சபாநாயகர் அப்பாவு, ஏங்க கேள்வி கோளரங்கம், துணை கேள்வி கேட்டால் விவரமா கேட்க வேண்டாமா என கேட்டார்.

இதையடுத்து, எம்.எல்.ஏ ரவி, அரக்கோணம் அரசு கல்லூரி வகுப்பறை பற்றாகுறை குறித்து கேள்வி எழுப்பினார். துணைக் கேள்விகள் பற்றியதாக இல்லாததால், இதற்கு சபாநாயகர் அப்பாவு, கோவிந்தசாமிக்கு சொன்னது தான், கேள்வி கோளரங்கம்; கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உக்காருங்க என்று கூறினார். இதனால், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.