திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மேகாவரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா (வயது 24). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி வேலை செய்து வந்தார் இரவு பகலாக லேப்-டாப்பில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை லேப்-டாப்பை சார்ஜ்போட்டுவிட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உயர் மின்னழுத்தம் வந்ததால் லேப்-டாப்பில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் லேப்டாப் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது. இதில் சுமலதா மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகியது. சுமலதா வலியால் அலறி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மின் இணைப்பை துண்டித்து சுமலதாவை மீட்டனர்.
கடப்பாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு சுமலதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சுமலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பி கோடூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.