வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சூரியனில் அதி சக்தி வாய்ந்த தீக்கதிர் வெடிப்பு இன்று(ஏப்.,20) ஏற்பட்டதால், செயற்கை கோள் வாயிலான தொலை தொடர்புகள் எந்நேரத்திலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, இந்திய விண்வெளி அறிவியல் சிறப்பு மையம் எச்சரித்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில், அவ்வப்போது தீக்கதிர் வெடிப்புகள் நிகழ்வது வழக்கம். அளவுக்கதிகமான வெப்பத்தின் போது, காந்த விசையால் ஏற்படும் இந்த வெடிப்புகள், சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை நீடிக்கும். இந்த வெடிப்பின் போது ஏற்படும் எரிசக்தியின் அடிப்படையில், செயற்கை கோள் வாயிலான தொலை தொடர்புகள், மின்சார வினியோக முனையங்கள், விண்கலங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு கணக்கிடப்படுகிறது.
இது குறித்து, இந்திய விண்வெளி அறிவியல் சிறப்பு மையத்தின் இணை பேராசிரியர் திப்யேந்து நந்தி கூறியதாவது: சூரியனின் காந்தப் புலத்தில், சக்தி வாய்ந்த தீக்கதிர் வெடிப்பு இன்று ஏற்பட்டுள்ளது. இது, சாதாரண வெடிப்பை விட, நுாறு மடங்கு சக்தி வாய்ந்தது. இதனால், செயற்கை கோள் வாயிலான தொலை தொடர்புகள், திசையறியும் சாதனங்கள், விமான தொலை தொடர்பு சேவைகளில், எந்நேரத்திலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆசிய – பசிபிக் பிராந்தியங்களில், இந்த பாதிப்பு இருக்கும். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து, அடுத்த சில நாட்களில் தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement