டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை டெல்லி நிர்வாகம் இன்று திடீரென இடித்து தள்ளியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் கடந்த 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்து அமைப்புகள் சார்பில் அப்பகுதியில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் அங்குள்ள மசூதி அருகே ஊர்வலம் வந்த போது, அவர்கள் மீது ஒருதரப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
கற்கள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்டவற்றை கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஒருசிலர் துப்பாக்கியாலும் எதிர் தரப்பினரை நோக்கி சுட்டனர். இந்த கலவரத்தில் 8 போலீஸார் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கலவரம் நிகழ்ந்த பகுதியான ஜஹாங்கிர்புரியில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகளும், கடைகளும் இருப்பதாக மாநகராட்சி மேயருக்கு டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா கடிதம் அளித்தார். இதன்பேரில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஜஹாங்கிர்புரிக்குள் இன்று காலை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினர். ஆனால், போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். வீடுகளும், கடைகளும் இடிக்கப்படுவதை கண்டு அங்குள்ள மக்கள் கதறி அழுதனர்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகும் இரண்டு மணிநேரம் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. அதன் பின்னரே இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைக்காததால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டதாக டெல்லி மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படுவதை தடுக்கக் கோரிய மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM