மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுனரின் கான்வாய் மீது கொடி, கொடி கம்புகள் வீசியவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு ஆளுனரின் பாதுகாப்பு அதிகாரியான விஷ்வேஷ் பி. சாஸ்திரி, தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
விஷ்வேஷ் பி. சாஸ்திரி கூற்றுப்படி, போராட்டக்காரர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கை ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் இருந்தது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 இன்படி அதாவது உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுனரை தாக்குதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
124 சட்டம்: தேசத்துரோக வழக்கு என்றால் என்ன?
இச்சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன.
மேலும், அச்சம்பவம் குறித்து புகாரில் சாஸ்திரி கூறியிருப்பதாவது, தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுனரின் கான்வாய் சென்றுகொண்டிருக்கையில், அங்கு சிலர் கருப்புகொடி ஏந்திக்கொண்டு கோஷமிட்டு கொண்டிருந்தனர்.
எஸ்விசி கல்லூரி அருகே திரண்டிருந்த போராட்டக்காரர்கள், ஆளுனரின் கான்வாய் கடந்து செல்வதை கண்டு ஆக்ரோஷமடைந்து, காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி முன்னேறி முயன்றனர். ஆனால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆளுனர் கான்வாய் மீது கொடிகள், கொடி கம்புகள் போன்றவற்றை தூக்கியெறிய தொடங்கினர். ஆளுனர் மற்றும் அவர் கான்வாய் எந்த பாதிப்பும் இன்றி கடந்து சென்றுவிட்டது என தெரிவித்தார்.