அகமதாபாத்: குஜராத்தில் இன்று உலகளவிலான ஆயுஷ் முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் கெப்ரியேசஸுக்கு குஜராத்தி பெயரான துளசி பாய் என்ற பெயரை சூட்டினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மன்சுக் மாண்டவியா, சர்பானந்த சோனோவால், முஞ்சப்பாரா மகேந்திரபாய் ஆகிய மத்திய அமைச்சர்கள் குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் பட்டேல் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். முதலீட்டு ஆதாரத்தை கண்டறியவும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஸ்டார்ட் அப் சூழல், தொழில் நலன்களை மேம்படுத்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:
ஆயுஷ் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பும், தேவையும் அதிகரித்துள்ளது. ஆயுஷ் மருந்துகள், துணை மருந்துகள், வாசனை திரவியங்கள் உற்பத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை நாம் கண்டு வருகிறோம். 2014-ல் 3 பில்லியன் டாலரை விட குறைவாக இருந்த ஆயுஷ் துறை 18 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது.
பாரம்பரிய மருத்துவத்தில் ஸ்டார்ட் அப் கலாசாரத்தை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போதைய காலம் யுனிகார்ன் நிறுவனங்களின் யுகமாக மாறியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியாவை சேர்ந்த 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் கிளப்பில் சேர்ந்துள்ளன.
ஆயுஷ் பொருட்களை ஏற்றுமதி செய்ய கடந்த காலங்களில் அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முயற்சிகளை எடுத்துள்ளது. நமது ஆயுஷ் நிபுணர்கள் இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் சேர்ந்து ஐஎஸ்ஓ தரத்தை உருவாக்கி வருகின்றனர். இது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுஷூக்கு மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையை உருவாக்கும்.
பாரம்பரிய மருத்துவத்தின் பங்கு காரணமாக கேரளாவில் சுற்றுலா அதிகரித்து வருகிறது. இந்த வளம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. இந்தியாவின் குணமடைதல், இந்த 10 ஆண்டில் மிகப் பெரிய வணிக முத்திரையாக இருக்கக் கூடும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா சார்ந்த நலவாழ்வு மையங்கள் மிகவும் பெயர் பெற்றவையாக விளங்கக் கூடும்.
வெகு விரைவில் ஆயுஷ் சிகிச்சைக்காக இந்தியா வருவோருக்கு சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது. இது ஆயுஷ் சிகிச்சைக்காக இந்தியா வருவோருக்கு பெருமளவு உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசசின் இந்தியா மீதான அன்பை விளக்கிய மோடி, தமது இந்திய ஆசிரியர்கள், குஜராத் மீதான தமது பரிவு ஆகியவற்றை விளக்கி அவருக்கு குஜராத்தி பெயரான துளசி பாய் என்ற பெயரை சூட்டுவதாக அறிவித்தார். இந்தியப் பாரம்பரியத்தில் துளசியின் மகிமையை அவர் விளக்கினார்.
முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், ‘‘உலகின் பெருமையாக கருதப்படும் மகாத்மா காந்தியின் சொந்த மாநிலம் மற்றும் நாட்டுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவின் வசுதேவ குடும்பகம் என்னும் தத்துவம் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை ஜாம்நகரில் தொடங்குவதற்கு உந்து சக்தியாக திகழ்கிறது. இந்த மையம் உருவாக்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது’’ எனக் கூறினார்.