டெல்லி: டெல்லியில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கிய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பதற்கு எதிராக மனு அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் கபில் சிபில், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தலைமை நிதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஜஹாங்கிர்புரி பகுதியில் புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி காலை தொடங்கியது. டெல்லி மாநகராட்சியின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். டெல்லி மாநகராட்சி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி நேற்று நோட்டீஸ் கொடுத்துவிட்டு இன்று வீடுகளை இடிப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் நோட்டீஸ் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அன்சார், உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.