புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது வன்முறை வெடித்தது.
இந்த மோதலை தடுத்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இந்த வன்முறையில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடந்து வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளி அன்சர் ஷேக் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறையின் முக்கிய குற்றவாளி அன்சர் ஷேக் உள்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக சாந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கான பணி இன்று தொடங்கிய நிலையில் இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கட்டிடங்களை இடிப்பதற்கு எதிராக மனு அளிக்கப்பட்ட நிலையில் டெல்லி வன்முறை வெடித்த இடத்தில் கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாற்போது நிலையே தொடரவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.