சென்னை: தமிழகத்தில் புதிய கோளரங்கம் அமைக்க திட்டமிட்டால் மதுரையில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தவர்க்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரை, “கந்தர்வர்க்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் 4 கோளரங்கங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, வேலூர், கோவை என்று 4 இடங்களில் இவை உள்ளன. திருச்சி மாவட்டத்தில் அண்ணா கோளரங்கம் உள்ளது. சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்த கோளரங்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோளரங்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
ஒரு கோளரங்கம் அமைக்க ரூ.15 கோடி செலவு ஆகும். என்னுடைய விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட உள்ளது.
எனவே புதுக்கோட்டை மாவட்ட கந்தவர்க்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா “மதுரையில் ஒரு கோளரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பூர்வாங்க செயல்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு கோளரங்கம் கூட இல்லை. எனவே மதுரையில் ஒரு கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர், “புதிய கோளரங்கம் அமைக்க முடிவு செய்தால் மதுரையில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.