திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் ரயில்வே பாலத்தின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட அம்மையநாயக்கனூர் போலீஸார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கொடைரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய கார் ஒன்று அம்மையநாயக்கனூரைக் கடந்து நிலக்கோட்டை சாலையில் சென்றது. அதே கார் மீண்டும் கொடைரோடு சுங்கச்சாவடியையும் கடந்து சுற்றிக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சந்தேகமடைந்த போலீஸார் காரின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த முருகன் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “சிவகங்கை மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(36). தற்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் இவர் அதேபகுதியில் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். மேலும் அதேபகுதியில் தனியார் ஏசி மதுபான பார் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்தப் பாரில் கேஷியராக தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்து,(32) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் முத்து பாரிலிருந்து 4 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இதையறிந்த முருகன் முத்துவிடம் கேட்டபோது, “பணத்தை எடுத்தது நான்தான் முடிந்தால் என்னை பிடித்து பார்” என சவால் விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது பாரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களுடன் பல்லடம் பஸ்ஸில் ஏறி தப்பிச்செல்ல முயன்ற முத்துவை தேடி பிடித்து பார்க்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு வைத்து முத்துவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது ஒருவர் உருட்டுக்கட்டையை எடுத்து முத்துவின் தலையில் அடித்ததில் நிகழ்விடத்திலேயே முத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து பதறிய முருகன் முத்துவின் உடலை அகற்ற திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக சினிமா பட பாணியில் முத்துவின் கழுத்தை அறுத்து தலையை துண்டிக்க முயற்சி செய்துள்ளனர். அதில் பயமும் பதட்டமும் அதிகரிக்கவே முத்துவின் உடலை முருகன் தனது காரில் தூக்கி போட்டு கொண்டு கூட்டாளிகளுடன் தனது சொந்த ஊரான கமுதி நோக்கி விரைந்துள்ளார்.
காரில் சென்று கொண்டிருக்கும் போதே விடிய தொடங்கிவிட்டதால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக கொடைரோடை அடுத்த அம்மையநாயக்கனூர் ரயில்வே பாலம் அருகே முத்துவின் உடலை இறங்கியவர்கள், ரயில் விபத்தில் உயிரிழந்தது போல ரயில்வே தண்டவாளத்தில் முத்துவின் உடலை வீசி விடலாம் என முடிவெடுத்துள்ளனர். பிறகு உயிரிழந்த முத்துவின் உடலை அங்கு போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய காரில் ஒட்டி இருந்த ஃபாஸ்ட்டேக், குற்றவாளிகள் கிளம்பியது முதல் திரும்பி சென்றது வரை அனைத்து விவரங்களையும் காட்டிக் கொடுக்க, பிணத்தை வீசி விட்டோம் யாருக்கும் தெரியாது என நினைத்து கொண்டு கொலையாளிகள் அனைவரும் மீண்டும் அவரவர்கள் சொந்த வேலைக்கு திரும்பி இருந்த வேளையில் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தோம். இறந்த முத்துவும் சாதாரணமான ஆள் இல்லை. என்ஜிஓ நடத்துகிறேன், சமூக சேவை செய்கிறேன், நிருபர் எனக் கூறி பல்வேறு சீட்டிங் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடைசியாக தினமும் குடிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து தான் பாரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கும் வழக்கமான வேலையை காட்டியதால் அவரின் வாழ்க்கை கொலையில் முடிந்துள்ளது” என்றனர்.
இக்கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஏசி பார் உரிமையாளர் முருகன், அவரின் கூட்டாளிகள் மருது செல்வம், கோபால், கார்த்திக், கவின், டென்னிஸ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பிறகு முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர்களை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் பாராட்டினார்.