திருச்சி மண்ணச்சநல்லூர் அரசினர் மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசினர் மருத்துவமனையில் 8 மருத்துவர்கள் ,7 செவிலியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 3 செவிலியர்கள், 10 துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 30 பேர் பணியாற்றி வருகிறார்கள். அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய இந்த மருத்துவமனையில் ஐம்பது நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தினசரி சுமார் 350 புற நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். மருத்துவமனையில் காவலாளிகள் என்று யாரும் கிடையாது. அங்கு வந்து செல்பவர்களை கண்காணிப்பதற்காக ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு செய்ததில், மருத்துவமனையின் முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அறைக்கு அருகே, காலணிகளையும், உடைகளையும் மாற்றிக்கொள்வதற்கான சிறிய பகுதியில், சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் சிவபாக்கியம் (வயது 55) எனவும், அவர் காணாமல் போய்விட்டதாக 16ஆம் தேதி உறவினர் ஒருவர் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த புகாரில் 12ஆம் தேதி மண்ணச்சநல்லூர் கடைவீதியில் டீக்குடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்றும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும், சிவபாக்கியம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறப்பட்டுள்ளது.
புகாரில் அடிப்படையில், காணாமல் போன சிவபாக்கியம் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தபோது மயங்கி விழுந்து மரணமடைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள். கடந்த 15ஆம் தேதி நெஞ்சவலியின் காரணமாக மருத்துவமனைக்கு சிவபாக்கியம் வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘உறவினர்கள் யாரையாவது அழைத்து வந்து, பின்னர் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த சிவபாக்கியம் மீண்டும் எப்போது மருத்துவமனையின் முதல் தளத்திற்கு சென்றார் என கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முதல் தளத்திலுள்ள அறுவைசிகிச்சைக்கான அந்த அறை, வாரம் ஒருநாள் மட்டுமே செயல்படும் என்றும், அறுவைசிகிச்சைக்கு முதல் நாள் அந்த அறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மைப் பணியாளர்கள் அங்கு செல்வார்கள் என்றும், மற்ற நாட்களில் அந்த அறையின் அலுமினிய கதவுகள் பூட்டியே கிடக்கும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பூட்டப்பட்ட கதவுகள் மிகவும் உறுதியானவை அல்ல. ஒரு நோயாளி மயங்கி கதவில் விழுந்தால்கூட கதவின் பூட்டுகள் திறந்துகொண்டுவிடும். அந்த அறைக்குள் அப்படியாக சிவபாக்கியம் விழந்து விட்டாரா என தெரியவில்லை எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடிகளிலும் மருத்துவமனை வராண்டாக்களிலும் பலர் ஓய்வுக்காக படுத்திருப்பதுண்டு. அவ்வாறாக ஓய்வுக்காக படுத்துக் கிடக்கும் நபர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என சோதித்துப் பார்க்கும் பணி யாருக்கும் வழங்கப்படவில்லை. தினசரி நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து செல்லும் ஒரு மருத்துவமனையில், மூன்று நாட்களுக்கு மேலாக ஒருவர் இறந்த நிலையில் கிடந்து இருக்கிறார். அது கண்டறியப்படாமல் இருந்திருக்கிறது என்பதுதான் வேதனை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM