நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட், பங்களா உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவு கோடநாடு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். பல தீர்க்கமான முடிவுகளை அவர் அங்கிருந்துதான் எடுத்துள்ளார் என்றும் தற்போது வரை கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு எப்போதும் மவுசு அதிகம்.
ஆனால், அவர் உயிரிழந்த பிறகு அந்த எஸ்டேடும், பங்களாவும் மர்ம பகுதிகளாக இப்போது மாறியுள்ளது. அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜும் சாலை விபத்தில் உயிரிழந்தார். எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது திட்டமிட்டு சதி என்றும் அங்கு இருந்த முக்கியமான ஆவணங்களை திருடவே இவ்வளவும் நடந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்படை போலீசார் சென்னைக்கு வந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடக்கம் குறித்து சிறிது பார்க்கலாம்.. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேடில் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா்.
5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளா் நாராயணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in