சென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு சார்பில் 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழகத்தில் அமல்படுத்த கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனச் செயலர் அர்ஜுனன் இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்து கோரப்பட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே, மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை, இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவில்லை. மாறாக, தாய் மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது.
நாடு முழுவதும் கல்வித் தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது, மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும். எனவே, தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்று கோரினார்.
இதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இடையீட்டு மனு தாக்கல்
இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் இரா.முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரா.முத்தரசன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘1976-ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகள் தமிழகத்துக்குப் பொருந்தாது என்பதால், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிசட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசு தனது சொந்த விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் குழு அமைத்து, அறிக்கை பெறுவதாக மனுதாரர் கூறுவது கண்டனத்துக்குரியது.
தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக இந்தியை திணிக்க முயற்சிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அவரவர் தாய்மொழியைப் பாதுகாக்கவும், தாய் மொழியில் கற்கவும் அனைத்து உரிமைகளும், அனைவருக்கும் உள்ளன. தாய் மொழியைக் காப்பது கடமையும்கூட. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘இந்தி மொழியின் ஆதிக்கத்தால் மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா போன்ற மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இது இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக உள்ளது.
இந்தி இல்லாமல் இந்தியா சாதித்தவை ஏராளம். எனவே, இந்தியை கட்டாயப்படுத்துவது என்பது, இந்தி தெரியாத இளம் தலைமுறையினரிடம் கூடுதல் சுமையைத் திணித்து விடும். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சியை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.