காந்திநகர்: ‘நாட்டில் பாரம்பரிய மருத்துவ தயாரிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் விரைவில் ஆயுஷ் முத்திரை அறிமுகப்படுத்தப்படும்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், காந்தி நகரில் 3 நாள் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மொரீசியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டாடினர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘பாரம்பரிய மருத்துவ தயாரிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் விரைவில் ஆயுஷ் முத்திரை அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் நாட்டில் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகியவற்றின் தரமான (ஆயுஷ்) தயாரிப்புக்களுக்கு நம்பகதன்மை கிடைக்கும். இதேபோல் பாரம்பரிய சிகிச்சை முறைக்காக இந்தியாவிற்கு வருபவர்களின் வசதிக்காக ஆயுஷ் விசா திட்டம் விரைவில் தொடங்கப்படும்,” என்றார். தொடர்ந்து, பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் பேசுகையில், ‘‘பொது மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட கால முதலீடுகள் அவசியமாகும். பாரம்பரிய மருந்துகளை சந்தைகளுக்கு கொண்டு வரும்போது, பாரம்பரிய மருத்துவம் குறித்த அறிவை பாதுகாத்து வெளியுலகுக்கு கொண்டு வந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.* துளசிபாய்…விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ், இன்று காலை என்னை சந்தித்தபோது தனக்கு குஜராத்தியில் பெயர் வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார், விழா மேடையிலும் அதை எனக்கு நினைவுப்படுத்தினார். இந்தியாவில் ஆன்மீக பெருமையும், புனிதமும் உள்ள துளசி செடியை நினைவுப்படுத்தும் ‘துளசிபாய்’ என அவருக்கு பெயரிடுகிறேன்,’ என்றார். இந்த பெயரை டெட்ரஸ் ரசித்தார்.* பிரதமர் விருதுகள்குடிமை பணிகள் தினத்தையொட்டி இன்று பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பிரதமர் விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்களின் நலனுக்காக ஒன்றிய அல்லது மாநில அரசின் அமைப்புகள் தவிர, மாவட்டங்கள் மற்றும் இதர பிரிவுகளால் செய்யப்படும் சிறந்த மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 16 விருதுகள் வழங்கப்படுகிறது,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.