புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து டெல்லி கவர்னருடன் அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பல லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா, கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்தது. உயிரிழப்புகள் வெகுவாக குறைந்தன. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 31ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாஸ்க் அணிவது கூட கட்டாயமில்லை என அறிவித்தனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டன. ஆனால் சமீப நாட்களாக மீண்டும் கணிசமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மத்திய அரசு டெல்லி, அரியானா உள்ளிட்ட 4 மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் குறிப்பிட்ட 4 மாநிலங்களிலும் வேகமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும், பாதிப்பை குறிக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் தலைமையில் ‘‘பேரிடர் மேலாண்மை ஆணையம்” ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், வருவாய் துறை அமைச்சர் கைலாஷ் மற்றும் டெல்லி பேரிடர் ஆணைய மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கக் கூடிய முறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதனை அடுத்து தலைநகர் டெல்லியில் மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு நேற்று 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. டெல்லியைப் போன்று மேலும் பல மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.