புதுடெல்லி,
பிரதமர் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக்கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தொழில் பயிற்சியை அங்கீகரிக்கிறது. இதன் மூலம், நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதன்படி, நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் 700-க்கு மேற்பட்ட இடங்களில் தொழில் பயிற்சி விழா நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியை பயிற்சி இயக்குனரகத்துடன் இணைந்து திறன் இந்தியா நடத்துகிறது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வெல்டர், எலக்டிரீசியன், அழகுக்கலை நிபுணர், பராமரிப்பு பணியாளர், மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சியில் இருந்து பட்டப்படிப்பு வரை தகுதிக்கேற்றபடி வாய்ப்புகள் வழங்கப்படும் என திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.