புதுடெல்லி / சென்னை: கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்று பெருமளவு குறைந்து வந்ததால், கடந்த ஏப்.1 முதல் நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. உத்தரபிரதேசம், ஹரியாணா, டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் திடீரென அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், கரோனா பரவாமல் தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்ளில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் டெல்லியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்னர். இதையடுத்து அங்கு முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்லியில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்பை கரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஓய்வு அறையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை பதிவாகிறது. இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
முகக் கவசம் கட்டாயம் என்பதை மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்திலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் முறை மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக கரோனா இறப்பு பதிவாகவில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் ஒன்று, இரண்டு என்ற அளவில்தான் உள்ளது. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.