நாங்குநேரி அருகே பட்டபிள்ளை புதூரில் வாழை பயிரிட்டு நஷ்டம் அடைந்ததால், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை. விவசாயியான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு வருடம் வாழை பயிரிட்டு இருந்தார். கொரோனா தொற்று காலம் என்பதால் இரண்டு வருடங்களும் வாழை பயிரிட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்த ஆண்டும் வானுமாமலை, அவருடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்டுள்ளார். தற்போது பயிரிட்ட வாழை விளைச்சல் சரி வர ஆகாததால், நேற்று அவருடைய தோட்டத்தில் வாழைக்கு பயன்படுத்தப்படும் கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து குடித்து மயங்கியுள்ளார்.
இதனைக் கண்ட தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், அவரை மீட்டு ஏர்வாடி மெர்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருந்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வானுமாமலையை கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி வானுமாமலை உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM