அமிர்தசரஸ்: லூதியானாவில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள திப்பா நகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள குடிசையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் குடிசைக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் தீயில் கருகி பலியாகினர்.இச்சம்பவம் குறித்து லூதியானா காவல்துறை உதவி ஆணையர் (கிழக்கு) சுரிந்தர் சிங் கூறுகையில், ‘தீ விபத்து நடந்த போது பெற்றோர் உட்பட ஐந்து குழந்தைகளும் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் லூதியானாவிற்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இறந்தவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.