சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
டாக்டர் ஷர்மிளா
“இந்தியாவிலுள்ள டீன் ஏஜ் ஆண்களும் பெண்களும் உணவு, உடைகள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு அதிக பணத்தைச் செலவழிக்கிறார்கள். கேட்ஜெட்டுகளுக்காக ஆண் பிள்ளைகளில் 64 சதவிகிதமும் பெண்களில் 21 சதவிகிதமும் பணம் செலவிடுகின்றனர். டீன் ஏஜ் பெண்கள் விதம்விதமான உடைகளுக்கு அதிக பணம் செலவழிப்பதையே விரும்புகிறார்கள். அதாவது அப்படிச் செலவழிப்பவர்களில் பெண்கள் 66 சதவிகிதம், ஆண்கள் 49 சதவிகிதம்… இப்படிச் சொல்கிறது லேட்டஸ்ட் புள்ளிவிவரம் ஒன்று.
டீன் ஏஜர்களுக்கு எப்படிப் பணம் கிடைக்கிறது?
இது குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றில் பங்கேற்றவர்களில் 50 சதவிகிதம் பேர், தாம் கேட்கும்போது பணம் கிடைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். 23 சதவிகித டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு மட்டுமே பாக்கெட் மணி கிடைக்கிறதாம். 25 சதவிகிதம் பேர் தங்களின் பிறந்தநாளின்போதோ, பண்டிகைகளின் போதோ நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். வெறும் 4 சதவிகிதம் பேர் மட்டுமே வீட்டில் ஏதாவது வேலைகள் செய்தால் பணம் கிடைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
பணத்தை எப்படிச் செலவு செய்கிறார்கள்?
2020-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஓரு கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா என இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் 10-19 வயது வரையிலான 1,200 பிள்ளைகள் இதில் பங்கேற்றனர். அவர்களில் 68 சதவிகிதம் பேர் ஆண்கள், 32 சதவிகிதம் பேர் பெண்கள். பதின்ம வயதினரின் செலவுசெய்யும் பழக்கம், வாழ்க்கைமுறைத் தேர்வு மற்றும் ஆசைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இது.
இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்த முக்கியமான விஷயம், பதின்ம வயதினர் உணவு, உடை மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு அதிகம் செலவழிக்கிறார்கள் என்பது. வெரைட்டியாக சாப்பிடுவதற்காக செலவு செய்வது என்பது டீன் ஏஜ் ஆண்கள், பெண்கள் இருவரிடமும் அதிகம் இருக்கிறது. உடைகள், உடைமைகள் விஷயத்துக்காக செலவுசெய்யும்போது டீன் ஏஜ் பிள்ளைகளிடம் பிராண்ட் பற்றிய எண்ணம் மேலோங்கி இருப்பதையும் இந்தக் கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. அதாவது உடைகளோ, கேட்ஜெட்ஸோ… பெரிய பிராண்டுகளின் தயாரிப்புகளாகப் பார்த்துச் செலவு செய்து வாங்கும் எண்ணம் அவர்களிடம் அதிகம் இருக்கிறது.
ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ஷாப்பிங்
டீன் ஏஜர்களிடம் ஆன்லைன் டெக்னாலஜியைப் பயன்படுத்தும் மோகம் அதிகமிருக்கிறது. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழான 50 சதவிகித டீன் ஏஜர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையே விரும்புகிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்க முடிவதாகவும் இதற்கு அவர்கள் காரணங்களை அடுக்குகிறார்கள். அதே நேரம் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் நேரம் செலவழிப்பது குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. உணவில் தொடங்கி, உடைமைகள் வரை இளைஞர்கள் விரும்பும் எதையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். உடனடி டெலிவரி வசதி அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
கல்வி உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து பிள்ளைகளிடம் விவாதிக்கும் பல பெற்றோரும், பண நிர்வாகம் குறித்துப் பேசுவதில்லை. டீன் ஏஜில்தான் பிள்ளைகள் நிதி நிர்வாகம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வயதில் அவர்கள் பழகும் நிதி மேலாண்மைதான் பிற்காலத்தில் அவர்களை பண விஷயத்தில் ஸ்மார்ட்டாக இயங்கவைக்கும். முடிவெடுக்கும் திறமை முதல் பொருளாதார நிர்வாகம் வரை அனைத்து நல்ல பழக்கங்களையும் பிள்ளைகளுக்கு போதிப்பது அந்த வயதில் சற்று சிரமமானதுதான். ஆனாலும் அவசியமானது என்பதை பெற்றோர் உணரத்தான் வேண்டும்.”
ஆஷ்லி
“என்னைப் போன்று டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு பணத்தைச் செலவழிப்பது பற்றியும் சேமிப்பது பற்றியும் சரியான முறையில் பெற்றோர் சொல்லித் தர வேண்டியது மிக முக்கியம். இந்த வயதில் விதம் விதமான உடைகளுக்கும் கேட்ஜெட்ஸுக்கும் செலவிடுவதுதான் எங்கள் முதல் விருப்பமாக இருக்கும். அதைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதில், `நீ செலவு செய்யும்போது அதுல ஒரு சின்ன தொகையை சேவிங்ஸ்ல போடு அல்லது ஏதாவது நல்ல காரியத்துக்குக் கொடு’ என்று சொல்லிப் பழக்கினால், நிதி பற்றிய எங்கள் பார்வையும் மாறும். 18 வயதானதும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு பெற்றோர் வங்கிக் கணக்கு ஆரம்பித்துக்கொடுக்கிறார்கள். ஏடிஎம் கார்டு கொடுக்கிறார்கள். 16 வயதிலேயே எனக்கு என் அம்மா அதைச் செய்தார். `நீ வருங்காலத்துல பணத்தை எப்படி ஹேண்டில் பண்ணப் போறேன்னு பார்க்கறதுக்கான தயாரிப்பு இது… கவனமா செலவு பண்ணு” என்றார். எனக்கு அது மிகப் பெரிய தெளிவைக் கொடுத்தது. என்மேலுள்ள நம்பிக்கையில் அம்மா அதைச் செய்திருக்கிறார், அந்த நல்ல பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வயதிலேயே நான் பணத்தைக் கையாள்வதில் கவனமாக இருக்கப் பழகிக்கொண்டேன். இந்த டெக்னிக்கை மற்ற பெற்றோர்களும் பின்பற்றிப் பார்க்கலாம்.”
– ஹேப்பி பேரன்ட்டீனிங்