அனைத்து அரசியல் கட்சிகளும் தம்மிடம் கோரினால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகத் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதியளித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், சுதந்திரம் பெற்ற 74 ஆண்டுகளில் சந்திக்காத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கிறார்கள்.
மேலும் நாடு முழுதும் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது.
இதற்கிடையே,
இலங்கை
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, அவரது அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு 11 நாட்களுக்கும் மேல் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் நேற்று வன்முறை வெடித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தென்மேற்கு பிராந்தியமான ரம்புக்கனாவில் போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பொருளாதார நெருக்கடி: என் மீதுதான் தவறு – இலங்கை அதிபர்!
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்காமல், போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். ஒரு எரிபொருள் வாகனத்துக்கும், ஆட்டோவுக்கும் தீ வைக்க முயன்றனர். இதனால், கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் முதலில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். அப்போதும் கும்பல் கலையாததால், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 12 பேர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உலக அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதை அடுத்து துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை செய்ய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தம்மிடம் கோரினால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகத் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதியளித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்து உள்ளார். எனினும் இந்தத் தகவலுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுப்புத் தெரிவித்துள்ளார்.