தாகோத்:
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தாகோத் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பஞ்சமகால் மாவட்டத்தில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டப்பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.22000 கோடி ஆகும்.
இந்நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, தாகோத் மாவட்டத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் மின்சார ரெயில் என்ஜின் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என அறிவித்தார். பிர்சா முண்டா, கோவிந்த் குரு போன்ற பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, சுதந்திரத்திற்குப் பிறகு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.
‘சுதந்திரத்திற்கு முன் இங்கு ஒரு நீராவி என்ஜின் பணிமனை நிறுவப்பட்டது. இப்போது ரூ. 20,000 கோடியில் ரெயில்வே மின்சார என்ஜின் உற்பத்தி ஆலையை அமைப்பதன்மூலம், இப்பகுதி மேக் இன் இந்தியா திட்டத்திற்கான பெரிய மையமாக மாறும். ஆயிரக்கணக்கான உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.