இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த இம்ரான்கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் 34 பேரை கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றது. மந்திரிகளின் பதவியேற்பு விழா நேற்று முன்தினமே நடைபெற இருந்தது. ஆனால், அதிபர் ஆரிப் அல்வி மந்திரிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் சபையின் தலைவர் சாதிக் சஞ்சராணி, நேற்று 31 மந்திரிகள் மற்றும் 3 இணை மந்திரிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 34 மந்திரிகளில் குறைந்தது 20 பேர் புதுமுகங்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் புதிய மந்திரி சபையில் இடம்பெறவில்லை.
முன்னதாக புதிய உள்துறை அமைச்சராக ராணா சனாவுல்லா நியமிக்கப்பட்டார். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி காலியாக உள்ள நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சராக ஹினா ரப்பானி கர் பதவியேற்றார். இந்த சூழலில் புதிய சுகாதார அமைச்சராக பாகிஸ்தான் மக்கள் கட்சி அப்துல் காதர் படேல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது நியமனம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. அப்துல் காதர் மீது நில பேரம், மின்சார திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அப்துல் காதர் படேலுக்கு ஜாமின் வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.