பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் இன்று மதசார்பின்மை மற்றும் மதவாதம் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளது. தினமும் என் மீது விஷத்தை கக்கி கொண்டிருக்கும் குமாரசாமி, தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும். தங்களது மதசார்பற்ற கட்சி என்று கூறிக்கொண்டு வருகிறீர்கள்.
அப்படி என்றால் வரும் நாட்களில் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்கு பின்னரோ பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவிக்க முடியுமா?. சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய உங்களின் வரலாற்றை பார்த்துவிட்ட மக்கள் உங்களை அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையை ஏற்படுத்த பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று நீங்கள் (குமாரசாமி) உங்களின் தந்தை (தேவேகவுடா) மீது சத்தியம் செய்து அறிவிக்க தயாரா?.
அவ்வாறு அறிவித்துவிட்டால் உங்கள் கட்சிக்கு உள்ள ‘பா.ஜனதாவின் பி டீம்’ என்ற களங்கம் நீங்கிவிடும். அது பொய் என்றும் நிரூபிக்கப்பட்டுவிடும். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, மோசமான மனநிலையுடன் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது, பொய்களை பரப்புவதை விரும்பினால் தொடர்ந்து அதையே செய்யுங்கள்.
பொது வாழ்க்கையில் உள்ள என்னையும், உங்களையும் மக்கள் பார்த்துள்ளனர். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.