அண்மையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `இந்தியா விரும்புவதை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என கூறியிருந்தார். இந்த நிலையில், “பாதுகாப்புத்துறையில் இந்தியா விரும்பும் எதையும் நாங்கள் வழங்க முடியும்” என செர்ஜி லாவ்ரோவ் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
தனியார் ஊடக நேர்காணலில் பேசிய செர்ஜி லாவ்ரோவ், “இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டின் உண்மையான தேசபக்தர். நாட்டின் பாதுகாப்பில், அதன் வளர்ச்சிக்கு என்ன தேவை என்று இந்தியா எதை நம்புகிறதோ அதனடிப்படையில் தான் நாங்கள் முடிவெடுப்போம் என்று அவர் கூறியிருந்தார். உண்மையில் பல நாடுகளால் இதுபோன்று கூற முடியாது.
பாதுகாப்பு மற்றும், சில மூலோபாயத் துறைகளில், மேற்கத்திய நாடுகள் எவரையும் ரஷ்யா நம்பாது. மேலும், ஐ.நா சட்டத்தை மீறி சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அனைத்து நாடுகளுடனும் பங்கேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதில் இந்தியாவும் ஒன்று.
இந்தியா எங்களின் நீண்டகால நண்பர். அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் இந்தியா விரும்பும் எதையும் நாங்கள் வழங்க முடியும்” என்று கூறியிருந்தார்.