புதுடெல்லி,
பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திடக்கழிவு, நீர் கழிவு மேலாண்மை திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் வரலாற்றில் தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட வரலாறாக தூய்மை இந்தியா திட்டம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு காலத்தில் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் மோசமாக விமர்சனம் செய்தன. ஆனால் இது இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் தீவிர நடவடிக்கைகளால் மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவு நனவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.