“பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்”- பாக்யராஜ் பேச்சு

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கருதப்பட வேண்டியவர்கள்” என நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசியுள்ளார்.
“பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தை பெற்றுக்கொண்ட பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ், “பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம். அவர் காவல் அதிகாரியாக பணி செய்தபோது பெங்களூரு நகரில் சிறப்பாக பணி செய்தார் என பலரும் பாராட்டி இருக்கின்றனர். நான் கர்நாடகா சென்றிருந்தபோது அவரைப்பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்தவகையில் தமிழகத்துக்கு சிறப்பான ஒருவர்  பா.ஜ.க தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Image
பலரும் பிரதமர் நிறைய வெளிநாடுகள் சென்றதை விமர்சிப்பார்கள். உண்மையில் பயணிப்பதற்கான உடல் தகுதி இருப்பதால் அவர் அடிக்கடி வெளிநாடு போகிறார். இந்த விஷயத்தை, `இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி அவர் செல்கிறார்? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார்?’ என்றுதான் நான் பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. வெளிநாட்டு பயணம் சென்றாலும், இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்கேயும் அவர் பங்கேற்பார். அந்தவகையில் மிகவும் வேகமாக செயல்படும் பிரதமர் அவர். சொல்லப்போனால் காஷ்மீர் பிரச்னை, இலங்கை பிரச்னை, உக்ரைன் போர் என எது இருந்தாலும் விமர்சனம் இருக்கும். பலர் விமர்சனம் செய்தாலும்கூட, பிரதமர் எதற்கும் செவி சாய்க்காமல் இருக்கிறார்.
இக்கட்டான சூழல் வரும்போது அதை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் அவர்மீது விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறைபிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க. ஏன் 3-மாசம்னு சொல்றேன்னா… 4-வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5வது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3-வது மாசமே பிறந்த `குறைபிரசவ’ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேசமாட்டாங்க; நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க.
image
நல்ல திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்தாலே பிரதமருக்கு அது பெருமை தான். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த புத்தகத்தை நான் பெற்று கொண்டது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.
சமீபத்திய செய்தி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.