பெங்களூரு:கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 1 மற்றும் இரண்டுக்கு இடையே, பயணியர் போக்குவரத்துக்கு, மின்சார பஸ்களை இயக்க, பி.ஐ.ஏ.எல்., எனும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
பி.ஐ.ஏ.எல்., தலைமை செயல் நிர்வாக அதிகாரி ஜெயராஜ் ஷண்முகம் கூறியதாவது: பெங்களூரில் காற்று மாசு, தொடர்ந்து அதிகரிக்கிறது. இதை குறைக்கும் நோக்கில், தேவைக்கு தகுந்தபடி மின்சார பஸ்களை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது.
கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் ஒன்று இரண்டுக்கு இடையே, பயணியர் நடமாட்டத்துக்கு, மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.தனியார் ஒருங்கிணைப்பில், பஸ்களை பெற திட்டமிட்டுள்ளோம். விருப்பமுள்ள நிறுவனங்கள் கோரிக்கை அனுப்பலாம். கோரிக்கை அனுப்ப ஏப்ரல் 25 கடைசி நாளாகும்.
விமான நிலையத்தில், சுற்றுச்சூழலில் மாசு அதிகரிக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இயற்கை எரிபொருள் பயன்படுத்துவது, மேற்கூரையில் ‘சோலார்’ பலகைகள் பொருத்துவது, காற்றாலை மின்சாரம் வாங்குவது தொடர்பாக, 2020 டிசம்பரிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இங்கு பின்பற்றப்படும் மின்சாரம் மிச்சப்படுத்தும் திட்டத்தால், 9,000 வீடுகளுக்கு வினியோகிக்கும் அளவுக்கு மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement