டெல்லி: மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை, புல்டோசரால் அகற்றுங்கள் என காங்., எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜஹாங்கீர்புரி வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வடக்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. அதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன், அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எவ்வித முன்னறிவிப்புமின்றி வீடுகள் அகற்றப்படுவதாகவும், அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்த உத்தரவில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து நாளை விசாரிக்கப்படும். அதுவரை இப்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்று தெரிவித்தார். ஆனால், வடக்கு ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை புல்டோசர் மூலம் அதிகாரிகள் அகற்றினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஜஹாங்கீர்புரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவிட்டது என்பது எங்களுக்கு தெரியாது. அதுகுறித்த ஆர்டர் காப்பியும் எங்களுக்கு கிடைக்கவில்லை; அதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்கிறோம்’ என்றனர். பிற்பகல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் நகல் கிடைத்தவுடன், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அப்பகுதியில் இருந்த மசூதியின் சுற்றுச்சுவரும் இடித்து கீழே தள்ளப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அதேநேரம் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இது இந்தியாவின் அரசியலமைப்பின் மதிப்பை தகர்க்கும் செயல். ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து அரசு நடத்தும் தாக்குதல் இது. அதற்கு பதிலாக மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசரால் அகற்ற வேண்டும் என கூறினார்.