மும்பை: மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அமைக்க அனுமதி பெறாதவர்கள் காவல் துறையிடம் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் மஹாராஷ்டிர பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறிய கருத்துக்கள் காரணம். மே 3க்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் தனது கட்சியினர் மசூதிகளுக்கு வெளியே ஒலிப்பெருக்கிகளை நிறுவி அனுமன் சாலிசாவை ஒலிக்க விடுவார்கள் என்றார்.
இந்த விவகாரத்தில் மஹாராஷ்டிர உள்துறை முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறுவேண்டியது கட்டாயம். இதனை கருத்தில் கொண்டு ஜமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் மஹாராஷ்டிர பிரிவு தலைவர் குல்சார் ஆஸ்மி, அனைத்து மசூதிகளும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த காவல் துறையிடம் அனுமதி பெறுங்கள், அவர்கள் அனுமதி வழங்குகிறார்கள் என வலியுறுத்தியுள்ளார். பெரும்பாலான மசூதிகள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறினார். மஹா., அரசு இவ்விவகாரத்தை திருப்திகரமாக கையாண்டதாகவும் தெரிவித்தார்.
Advertisement