லக்னோ: டெல்லி ஜஹாங்கிர்புரியில் ராம நவமி ஊர்வலத்தின்போது கலவரம் மூண்டது. இதுபோல வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத ஊர்வலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈத் மற்றும் அக்சய திரிதியை பண்டிகைகள் வரும் மே மாதம் ஒரே நாளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மத ஊர்வலங்கள் நடத்த முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மத ஊர்வலம் நடத்த விரும்பும் அமைப்புகள், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பாரம்பரிய மத பண்டிகை தொடர்பான ஊர்வலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, உ.பி. காவல்துறையைச் சேர்ந்த அனைவரின் விடுமுறையும் மே 4-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாநில அரசு அறிவித்தது.