மோடியை விமர்சிப்போர் குறைபிரசவத்தில் பிறந்தோர் என பாக்யராக் பேசியதற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக்நாதன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
“பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘’எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் பிரதமர்மீது விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறைபிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க. ஏன் 3-மாசம்னு சொல்றேன்னா… 4-வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5வது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3-வது மாசமே பிறந்த `குறைபிரசவ’ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேசமாட்டாங்க; நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க’’ என்று விமர்சித்தார்.
குறைபிரசவ குழந்தைகளை பாக்யராஜ் விமர்சித்ததற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர், பாக்யராஜ்க்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் சொல்லலாமா? என்றும், ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறித்து பேசி அரசியல் காண முயற்சிப்பதா? என்றும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM