மருந்துத் தட்டுப்பாட்டினால் இதுவரை எந்தவொரு மரணமும் இடம்பெறவில்லை; என்று சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) இடம்பெற்ற மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளும் விளையாட்டின் போது ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ,நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும், செஞ்சிலுவைச் சங்கமும் இலங்கைக்கு உதவுகின்றன. இந்தியாவின் கடனுதவியின் கீழ் தேவையான மருந்து வகைகளை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன:
வைத்தியத் துறையின் தரத்தைப் பாதுகாப்பது இலங்கை மருத்துவப் பேரவையின் பிரதான இலக்காக இருக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலை ஏற்றத்தினால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே
முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விலைச் சூத்திரம் தற்சமயம் அமுலில் இருக்குமாயின் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 360 ரூபா வரை அதிகரித்திருக்கும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன
நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுமென்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் குரல் எழுப்பியதாக எதிர்க்கட்சி அன்று கூறியிருந்தாலும் இன்று அதற்கு எதிராகச் செயற்படுவதாகவும் ரோஹித்த அபேகுணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.