மாவட்டத்திற்கு ஒரு செவிலியர் கல்லூரி என்பதே அரசின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மருத்துவத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தின் அருகிலுள்ள மதுரையில் 50 இடங்களுடன் செவிலியர் கல்லூரியும், 100 இடங்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளியும், இராமநாதபுரத்தில் 100 இடங்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளியும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 50 இடங்களுடன் செவிலியர் கல்லூரி மற்றும் தேனியில் 100 இடங்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகின்றன. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற மாணவர்கள் அருகாமையில் இருக்கின்ற மாவட்டங்களுக்குச் சென்று, பயின்று கொள்வதற்கு ஏதுவாக, இந்தக் கல்லூரிகள் அமைந்திருக்கிற சூழலில் புதிய செவிலியர் கல்லூரி என்பது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதைய எழவேண்டிய அவசியம் கருத்தில் இல்லை.
11 மருத்துவக் கல்லூரிகளின் வரலாற்றைத் தொடர்ந்து பல முறை சொல்லியாகிவிட்டது. சொல்லி, சொல்லி எனக்கும் புளித்தே போய்விட்டது. எனவே, மீண்டும் மீண்டும் அதையே சொல்வது என்பது தேவை இருக்காது என்று கருதுகிறேன். உறுப்பினர் கூறிய சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருத்துவக் கல்லூரி, 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 21 ஆம் தேதி கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது என்பதை அவரும் அறிவர். அந்தக் கல்லூரியில் 13 துறைகள் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன. 50 ஏக்கர் நிலப்பரப்பில் 500 படுக்கைகளுடனான அந்தக் கல்லூரிக்கு, கடந்த வாரம் கூட தமிழக முதல்வர் நவீன வசதியுடன் கூடிய 28 தீவிர சிகிச்சை படுக்கைகளை திறந்து வைத்திருக்கிறார். இப்படி பல வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு  கொண்டிருக்கின்றன. இருந்தாலும், உறுப்பினரின் கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்று, தமிழகத்தில் எங்கெல்லாம் செவிலியர் பயிற்சி பள்ளிகள், செவிலியர் கல்லூரிகள் இல்லையோ, அந்த மாவட்டங்களில் எதிர்காலத்தில் படிப்படியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
அந்த மருத்துவமனையில் ஏற்கெனவே  எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்-ரே, அல்ட்ராசவுண்ட் கைடட் மெக்கானிக்கல் வென்டிலேட்டர், மமோகிராம், டயாலிசிஸ் மெஷின், ஆர்டி-பிசிஆர் என பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடிய கருவிகள் இயக்கத்தில் இருக்கின்றன. என்றாலும் கூட, உறுப்பினர் தெரிவித்திருக்கிற கூடுதல் கருவிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
இந்திய மருத்துவத்திற்கு முதல்வர் எந்த அளவிற்கு முக்கியத்துவத்தை அளித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் நன்றாக அறிவோம். சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் என ஒன்று தமிழகத்தில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவரும் அறிவார்.  எனவே,  மிக விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் போன்றவற்றில் அதி நவீன வசதிகள் தமிழகத்திற்கு வருகிறபோது, அவர் சொன்ன, அந்தக் காலி பணியிடங்கள் அவர்கள் படித்த அந்த படிப்புக்கு, அனைத்துமே, தமிழகத்தில் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
தமிழகத்தில் ஏற்கெனவே 5 இடங்களில் செவிலியர் கல்லூரிகளும், 21 இடங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகளும் இருக்கின்றன. எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ அங்கேயெல்லாம் அமைப்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அப்படி மேற்கொள்ளப்படும்போது திருவாரூருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள் அமைவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். அந்த வகையில், கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சியிலும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே நான் பல முறை சொன்னதைப்போல கடைசி மனிதனுக்கும் சுகாதாரம் மருத்துவ வசதி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்து கொண்டிருக்கின்றது. தமிழக முதல்வர் மருத்துவத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தினந்தோறுமான ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது என்பதைக் காட்டிலும்  அந்தப்  பகுதி மக்களுக்கு சரியான மருத்துவம் போய்ச் சேர்கிறதா என்பதை கண்காணிப்பது மிக அவசியம். அந்த வகையில் அவர் சார்ந்திருக்கின்ற பகுதிக்கு என்ன வசதிகள் வேண்டுமோ அதை எதிர்காலத்தில் செய்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
சேலத்தில் ஏற்கெனவே செவிலியர் கல்லூரியும் இருக்கின்றது. செவிலியர் பயிற்சிப் பள்ளியும் இருக்கின்றது. மாவட்டத்திற்கு ஒன்று என்பது இந்த அரசின் இலக்கு. உறுப்பினர் சொல்வதைப்போல தொகுதிக்கு ஒன்று என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இருந்தாலும் இது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.