புதுடெல்லி: “மிகப் பெரிய தவறை செய்துவிட்டனர்” என்று டெல்லி காவல் துறைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 16-ஆம் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியின் ஜஹாங்கிர்புரி மசூதியின் அருகே மாலை 6.15 மணிக்கு ராம நவமி ஊர்வலம் வந்தபோது முகம்மது அன்ஸர் (35) என்பவர் தலைமையில் ஒரு கும்பல் மறித்தது. அங்கு இருவருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் கலவரமாக மாறி, மசூதியின் மீது காவிக்கொடி நாட்ட முயற்சி, கற்கள் வீசப்பட்டு, முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டன. எதிர்தரப்பிலும் கற்களுடன் பாட்டில்களும் வீசப்பட்டன. ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. இதில் துணை ஆய்வாளர் உட்பட 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கலவரத்தில் தொடர்புடைய விஷ்வ ஹிந்து பரிஷத், பஜரங் தல் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது எப்ஐஆர் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் பேசும்போது, “விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தல் அமைப்பினர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்தோம். ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதிகளுக்கு முன்பாக காவல்துறை பணிந்ததாகத் தெரிகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் சட்டத்தை மதிக்கும் அமைப்பு .
எங்கள் அமைப்பினர் மீது பொய்யான தகவலைப் பதிவு செய்து கைது செய்தால் டெல்லி போலீஸுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தை நடத்துவோம். எங்கள் அமைப்பினர் மீது எப்ஐஆர் பதிவு செய்து மிகப் பெரிய தவறை டெல்லி போலீஸ் செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.