ரம்புக்கனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, ரம்புக்கனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தை தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
எப்பொழுதும் இலங்கைக்கு மிகுந்த கௌரவத்துடன் சேவையாற்றி வரும் இலங்கை காவல்துறையால், கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
சமமான மரியாதை மற்றும் கௌரவத்துடன் போராட்டக்காரர்கள் தங்கள் குடிமை உரிமையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மகிந்த வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது.
இதனையடுத்து, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர், இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரம்புக்கனையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.