மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செல்போன் எடுத்து செல்ல நீடிக்கும் தடை அகற்றப்படும் என வாக்குறுதி அளித்த அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தேர்தல் வாக்குறுதி போல இதனையும் மறந்து விட்டதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மதுரைக்கு பெருமை சேர்க்கும் மீனாட்சியம்மன் கோயில் உலக புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. மதங்களைத் தாண்டி இந்த கோயிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர் பக்தர்கள் முதல் வெளிமாநில பக்தர்கள் வரை தினமும் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். அதனால், மதுரையில் சுற்றுலாவும், அதை சார்ந்த தொழிலாளர்களும் கொடிகட்டி பறந்தது. குறிப்பாக மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகள், தென் தமிழகத்தின் வியாபார ஸ்தலமாக இருந்தது. சாதாரண வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஜவுளிக்கடைகள், தங்க நகை கடைகள் உள்பட அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மீனாட்சிம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைகளில் கிடைக்கும். அதனால், சுற்றுலாவைத் தாண்டி வர்த்தகத்திலும் மதுரை பெரும் வளர்ச்சிப் பெற்றது. ஆனால், மீனாட்சிம்மன் கோயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கியதும் மதுரையின் சுற்றுலா வளர்ச்சியும், அதனை சார்ந்த தொழில்களும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
கடந்த 4 ஆண்டிற்கு முன் மீனாட்சிம்மன் கோயிலில் நடந்த தீ விபத்திற்கு பின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் செல்போன்களை, அதற்கென நான்கு கோபுர வாசல்களிலும் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் ஒப்படைத்துவிட்டே கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்யவோ, சுற்றிப் பார்க்கவோ செல்ல முடியும். மீனாட்சிம்மன் கோயிலில் சாமி தரிசனம், கோயில் கட்டிட அமைப்பு, அதன் அழகை கண்டு ரசிக்க குறைந்தப்பட்சம் 2 முதல் 3 மணி நேரம் வரையாவது எடுக்கும். அந்தளவுக்கு இந்த கோயில் வளாகம், உள்ளே செல்வோரை மனதை கொள்ளை கொள்ளும். சாதாரண உள்ளூர் வியாபாரிகள், தொழிலாளர்கள் முதல் உலக கோடீஸ்வரர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் எனக் கோயிலுக்கு வரக்கூடியவர்கள் 3 மணி நேரம் செல்போனை ஒரு இடத்தில் ஒப்படைத்துவிட்டு கோயிலுக்குள் நிம்மதியாக சாமி தரிசனமும், சுற்றிப்பார்க்கவும் செல்ல முடிவதில்லை. மேலும், அவர்கள் கொண்டு வரும் செல்போன்களும் குறைந்தப்பட்சம் ரூ.10 ஆயிரம் ஒரு லட்சம் வரை விலை மதிப்புள்ளவையாக இருக்கின்றன. அவற்றை ஒரு பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து செல்வதற்கு அவர்களுக்கு மனமில்லை. அதனாலே உள்ளூர் பக்தர்கள் வருகை கோயிலுக்குள் தற்போது குறைந்து விட்டது.
கடந்த காலத்தில் இளைஞர்கள், உள்ளூர் பக்தர்கள், தினமும் மாலை நேரத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். தற்போது செல்போன் ஒப்படைக்க வேண்டும் என்ற தொந்தரவால் அவர்கள் கோயிலுக்கு முன்போல் தொடர்ச்சியாக வருவதில்லை. தற்போது கரோனாவிற்கு பிறகு அனைத்து சுற்றுலா ஸ்தலங்கள், ஆன்மீக ஸ்தலங்களுக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துவிட்டது. ஆனால், மீனாட்சிமமன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், அவர்கள் குடும்பத்தினர், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவது வழக்கம். தற்போது அவர்கள் கூட பெருமளவு வருவதில்லை. இதனை கோயில் நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கிறது. அதனால், தமிழக அரசு கவனத்திற்கு மீனாட்சிம்மன் கோயிலில் நீடிக்கும் பிரச்சினை சென்றடையவில்லை. சித்திரைத் திருவிழாவில் குவியும் பக்தர்கள் அனைவரும் மீனாட்சிம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். தற்போது செல்போன் தடையால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கோயிலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதனாலே, கள்ளழகர் வந்தபோது நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு, மீனாட்சிம்மன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததை உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் செல்போன் எடுத்து செல்வதற்கு விதிவிலக்கு பெறுவதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த கால நடைமுறைகளை பின்பற்றப்படும் என உறுதியளித்து இருந்தனர். ஆனால், இதுவரை அவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யததாக தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியை போல் இந்த வாக்குறுதியையும் அவர்கள் மறந்துவிட்டதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.