சுவிட்சர்லாந்தில் லொட்டரி வாங்கிய ஒருவர், தனக்கு ஜேர்மன் மொழி தெரியாததாலும், தனக்கு சற்று உடல் நிலை சரியில்லாததாலும், தான் வாங்கிய லொட்டரிச் சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்று பார்ப்பதற்காக தனது நண்பரை அனுப்பியுள்ளார்.
திரும்பி வந்த அந்த நண்பர் அவருக்கு லொட்டரியில் 2,300 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
லொட்டரியில் பரிசு விழுந்த மகிழ்ச்சியில், அந்த நபர் தன் நண்பருக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுத்து தன் மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிறகு அந்த நண்பர், லொட்டரி டிக்கெட்டின் புகைப்படம் ஏதாவது மொபைலில் இருந்தால் அதை அழித்துவிடும்படி கூறியிருக்கிறார். ஆகவே, சந்தேகம் ஏற்பட்டதால் உண்மை நிலை குறித்து விசாரித்த அந்த நபருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
ஆம், அவருக்கு லொட்டரியில் விழுந்த தொகை 46,000 சுவிஸ் ஃப்ராங்குகள். ஆனால், அவர் யாரைத் தன் நண்பர் என்று நம்பினாரோ, அந்த நபர் அவரை பொய் சொல்லி ஏமாற்றி, வெறும் 2,300 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே பரிசு விழுந்துள்ளதாகக் கூறியது தெரியவந்துள்ளது.
Zug மாகாணத்தைச் சேர்ந்த அந்த மோசடியாளாருக்கு தற்போது 4,000 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொடுமை என்னவென்றால், லொட்டரியில் பரிசு வென்றவருக்கு இன்னமும் அந்தத் தொகை கிடைக்கவில்லை. அதற்காக அவர் தனியாக நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.