கொடூரர்கள் என அறியப்படும் ரஷ்யாவின் மிக ஆபத்தான கூலிப்படையினர் ஆயிரக்கணக்கானோர் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. இதில் ரஷ்ய ராணுவத்தினருடன் Wagner குழு என்ற மிக ஆபத்தான கூலிப்படையும் களமிறக்கப்பட்டது.
ஆனால், 8,000 பேர்கள் உக்ரைனில் களமிறங்கியதில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.
அதில், Wagner கூலிப்படையில் சுமார் 3,000 பேர்கள் இதுவரை உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட இராணுவம் என அறியப்படும் Wagner கூலிப்படையானது, களமிறக்கப்பட்ட உலக நாடுகளில் பலவற்றில் கொலை, வன்கொடுமை, போர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் களமிறங்கும் முன்னர் குறித்த கூலிப்படையானது சிரியாவில் செயல்பட்டு வந்துள்ளது.
Wagner உட்பட மொத்தம் மூன்று கூலிப்படைகள் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ளது. இதில், வெளியாகியுள்ள எண்ணிக்கையை விட இவர்கள் பல மடங்காக இருக்கலாம் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்னர், தலைநகர் கீவ்வில் 200 பேர்கள் கொண்ட கூலிப்படை குழு ஒன்று களமிறக்கப்பட்டு, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரை படுகொலை செய்ய ரஷ்யா திட்டமிட்டது.
உலக நாடுகளை உலுக்கிய உக்ரைனின் புச்சா நகர அட்டூழியங்களுக்கும் காரணம் ரஷ்யாவின் Wagner கூலிப்படையாக இருக்கலாம் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்வதை விளையாட்டாக கருதும் கொடூர மன நிலை கொண்டவர்களே Wagner கூலிப்படை என முன்னாள் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் காணப்பட்ட அதே அளவு கொடூரத்தை உக்ரைனில் புச்சா உள்ளிட்ட நகரங்களில் Wagner கூலிப்படை நிகழ்த்தியுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போர் குற்ற நடவடிக்கைகளில் ரஷ்ய இராணுவம் ஈடுபடவில்லை என விளாடிமிர் புடின் உறுதிபட கூறுவதற்கு பின்னால் Wagner கூலிப்படை உள்ளது எனவும் பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.