புதுக்கோட்டை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பட்டதாரி இளைஞர்களிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஏமாற்றி 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கான நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார். அந்த நிறுவனத்தில் பணி கிடைக்காததால் ஊர் திரும்ப ரயில் நிலையத்தில் காத்திருந்தபொழுது அங்குவந்த நெய்வேலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (46) என்பவர், அந்தப் பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்து நேர்காணலில் வேலை கிடைக்காததை அறிந்துள்ளார்.
பின்னர் அவர் அந்தப் பெண்மணியிடம் நீங்கள் கவலை அடையவேண்டாம், உங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைத் தாருங்கள். நான் உங்களுக்கு விமானநிலையத்தில் வேலை வாங்கித்தருகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்து, அந்தப் பெண்மணியிடம் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை பெற்றுசென்றிருக்கிறார். மேலும் அந்தப் பெண் தனது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை என்று கூறியவுடன் தனக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெரிந்தவர்கள் உள்ளார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அந்தப் பெண் சொந்த ஊர் திரும்பியவுடன், ஸ்ரீகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி ,பின்னர் அந்தப் பெண்ணின் சொந்த ஊரான விராச்சிலைக்கு சென்று, அதே பகுதியில் 110 நாட்கள் தங்கியிருக்கிறார். அவர் தங்கிய நாட்களில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசி விமான நிலையத்தில் தனக்கு தெரிந்தவர்களை வைத்து வேலை வாங்கித்தருவதாக உத்தரவாதம் அளித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ மெக்கானிக்கல், பிஇ மெக்கானிக்கல் படிப்புகளை படித்த 15 நபர்களிடம் பேசி பழகி அவர்கள் அனைவருக்கும் வேலை வாங்கித்தருவதாகக் கூறிய ஸ்ரீகாந்த், அவரது சொந்த செலவிலேயே ரயில் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் இவர் அழைத்துச் செல்வதற்கு முன்பாக அந்த வேலையைப்பெற வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் விமான நிலைய வளாகத்தில் நின்றபோது ஸ்ரீகாந்தின் நண்பர்களான சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமதுள்ளாபீர் (38), மன்சூர் உள்ளகான் (41) ஆகிய இருவர் விமான நிலைய அதிகாரிகளை போல் வந்து ஸ்ரீகாந்த் அழைத்துச்சென்ற நபர்களிடமிருந்து மொத்தம் 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளனர்.
இதன்பிறகு அந்த 15 பேரும் ஊர் திரும்பிய பிறகு, ஸ்ரீகாந்த் விமான நிலையத்தில் வேலைக்கான பணி நியமனச்சான்று போல் போலியான சான்றை அந்த 15 பேருக்கும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் அந்த பணி நியமன ஆணை குறித்து 15 நபர்களும் விசாரணை மேற்கொண்டபோதுதான், அந்த பணி நியமன ஆணை போலி என்பது தெரியவந்திருக்கிறது.
இதனால் பணம் கொடுத்த ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த 15 பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஸ்ரீகாந்த் தங்களை ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விராச்சிலை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் நடந்தவற்றை எடுத்துக்கூறி, ஸ்ரீகாந்த் தங்களிடமிருந்து 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கடந்த 11 ஆம் தேதி புகார் அளித்தார்.
புகாரையடுத்து போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த மூன்று பேரின் தொலைபேசி எண்களை ட்ரேஸ் செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாரிமன்னன் தலைமையிலான போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். போலீசார் கைது செய்த மூன்று நபர்களிடமும் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் இந்த குற்றச் சம்பவத்தில் முதல் குற்றவாளியான ஸ்ரீகாந்த் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 2005ஆம் ஆண்டு இவர் தனது சொந்த வீட்டிலிருந்தே 25 சவரன் நகையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்திருக்கிறாது.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீகாந்தின் தாயார் அவர்மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததும், பின்னர் தாயாரும் இறந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிநபராக வாழ்க்கையை நடத்திவருவதும், முகவரி, ஆதார் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் ஒரு ஈமெயில் ஐடியை மட்டும் வைத்துக்கொண்டு ரயிலிலும், பேருந்து நிலையங்களிலும் தங்கி நாடோடி வாழ்க்கை வாழ்ந்துவருவதும் தெரியவந்துள்ளது. இதேபோல் ஸ்ரீகாந்த் மீது சென்னையில் ஒரு மோசடி புகார் உள்ளது என்பதும், மேலும் ஸ்ரீகாந்த் ரயிலில் செல்பவர்களிடம் செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடிய குற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளை கற்றுள்ள ஸ்ரீகாந்த், 15 நபர்களை ஏமாற்ற ரயிலில் சென்னைக்கு அழைத்துச் சென்றபொழுது அவர்களுக்கு தெரியாமல் அதே ரயிலில் வேறொரு கம்பார்ட்மெண்டில் விமான நிலைய அதிகாரிகளாக நடித்த முகமதுல்லாபீர், மன்சூர்உள்ளகான் ஆகிய இருவரையும் அழைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த இருவரிடமும் 15 நபர்கள் வேலைக்காக கொடுத்த பணத்தில் தலா 20 ஆயிரத்தை மட்டும் வழங்கிவிட்டு மீதிப்பணத்தை ஸ்ரீகாந்த் எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்துள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM