பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஷாங்காயில் பரவல் சற்று குறைந்துள்ள போதிலும் அங்கு நேற்று 7 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை முன் வைத்து சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது.
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது.
சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய். இங்கு கரோனா தொற்று பரவியதால், கடந்த 5 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். உணவு மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் ஸ்தம்பித்தது.
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். மேலும், ஷாங்காய் பொருளாதார ரீதியாக முக்கியமான நகரம் என்பதால் தொழில் முடக்கமும் சீனப் பொருளாதாரத்தைப் பதம் பார்க்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஷாங்காய் நகரில் ஊரடங்கில் சில தளர்வுகளை சீன அரசு அறிவித்தது. அதன்படி கரோனா தொற்று குறைந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், முழு ஊரடங்கை நீக்கி பகுதி நேர ஊரடங்கை சீன அரசு அறிவித்தது.
இந்தநிலையில் ஷாங்காயில் கரோனா காரணமாக நேற்று ஒரே நாளில் ஏழு பேர் இறந்துள்ளனர் கரோனா தொற்று பரவல் ஒரளவு கட்டுக்குள் வந்தாலும் இந்த மாதத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 17 ஆக உள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையின்படி நாட்டில் புதிதாக 2,753 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 2,494 ஷாங்காயில் பதிவாகியுள்ளன.
அதுபோலவே சீனாவில் மொத்தம் 17,166 அறிகுறியற்ற கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஷாங்காயில் பதிவாகியுள்ளது. ஷாங்காயில் நேற்று ஒரே நாளில் 16,407 அறிகுறியற்ற கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மொத்தம் 2,365 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 19-ம் தேதியான நேற்று ஷாங்காயில் மேலும் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் தொற்று அதிகரித்த பிறகு மொத்த கரோனா பலி எண்ணிக்கையை 17 ஆக அதிகரித்துள்ளது.
2019 டிசம்பரில் வுஹானில் கரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து சீனாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,655- ஐ எட்டியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஷாங்காய் தவிர, சீனாவில் 14 மாகாணங்களில் புதிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் வடகிழக்கு மாகாணமான ஜிலினில் 133 மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு உட்பட பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 30,773 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பலி அதிகமாக உள்ளபோதிலும் ஷாங்காயில் இனிமேல் கடுமையான லாக்டவுன் அமல்படுத்த வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தொடர்ந்தால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதாலும் மக்கள் எதிர்ப்பும் அதிகரிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.