ஹரியாணாவில் 50 அடி ஆழ சாக்கடைக் குழியில் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது புத்தக்கேரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பாதாளச் சாக்கடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடைப்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்ததால், நகராட்சி நிர்வாகத்தினர் அந்தப் பகுதிக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4 ஊழியர்களை அங்கே வரவழைத்து அவர்களை சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யுமாறு கூறினர். அதன்படி அவர்களும் சாக்கடைக்குள் ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர். ஆனால், இறங்கி பல நிமிடங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நகராட்சி ஊழியர்கள், உள்ளே எட்டிப் பார்த்த போது அவர்கள் பேச்சு – மூச்சு இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு வந்து முறையான முகக்கவசங்களை அணிந்து சாக்கடைக்குள் இறங்கி அவர்களை மீட்டனர். எனினும், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். ‘மனிதர்களின் கழிவை மனிதர்கள் அகற்றும் வேலையில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. இருந்தபோதிலும், இதுபோன்ற அவலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM