KGF 2 or Beast? வசூலைக் குவித்தது எது? – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

`பீஸ்ட்’, `கே.ஜி.எஃப்-2′ ஆகிய படங்கள் வெளியாகி ஒருவாரம் நெருங்கிய நிலையில், அதன் வசூல்கள் குறித்து பேச்சு இன்னமும் பெரிய விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.

`பீஸ்ட்’, `கே.ஜி.எஃப்-2′ – ரெண்டுல எந்தப் படம் அதிக வசூலைக் கொடுத்துட்டு வருது? `கே.ஜி.எஃப்-2′ ஸ்க்ரீன்ஸ் அதிகப்படுத்தி இருக்காங்களா?

“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விஜய் படத்துக்கு வரவேற்பு இருக்கு. மொத்தம் உள்ள ஆயிரம் தியேட்டர்கள்ல தொள்ளாயிரம் தியேட்டர்கள்ல ‘பீஸ்ட்’ படத்தைத் திரையிடத்தான் விரும்பினோம். இருக்கற எல்லா பெரிய ஸ்க்ரீன்லயும் ‘பீஸ்ட்’தான் போட்டிருக்கோம். இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனம் வந்தாலும் கூட வசூலை பொறுத்தவரையில் நம்பர் ஒண்ணா நிக்குது. முதல் ஐந்து நாள் வசூலே பிரமிக்கத்தக்க வசூலாதான் இருக்குது.

திருப்பூர் சுப்ரமணியம்

இன்னொரு விஷயம், விஜய் படத்தை பொறுத்தவரை குடும்பத்துடன் வர்ற ஆடியன்ஸ்கள்தான் அதிகம். அந்த வகையில் இந்தப் படத்தை பொறுத்தவரை மிகப்பெரிய கலெக்‌ஷன்தான். ‘கே.ஜி.எஃப் 2’வை பொறுத்தவரையில் ஆல் இந்தியா ரிலீஸ்னால, ஏப்ரல் 14க்கு வந்திருக்கு. அதனால தியேட்டர்கள் அதிகம் ஒதுக்க முடியல. அதனால சின்னச் சின்ன தியேட்டர்கள்லதான் படம் ரிலீஸ் ஆச்சு. சில ஊர்ல நாங்க புது ரிலீஸ் படமே போடாத தியேட்டர்கள்ல கூட, ‘கே.ஜி.எஃப்.2’தான் போட்டிருக்கோம். தமிழ் நாட்டுல இங்குள்ள நடிகர்களின் படத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்க முடியும். மக்களும் பீஸ்ட்டுக்குத்தான் முன்னுரிமை குடுக்குறாங்க. ‘கே.ஜி.எஃப்’ படமும் வசூலை கொடுக்குது. ஆனா, ரெண்டு படத்தோட வசூலையும் ஒப்பிடவே முடியாது.

கமெர்ஷியல் சக்சஸ் பத்தித்தான் நாங்க பேசமுடியுமே தவிர, படங்களோட விமர்சனங்கள் பத்தி நாங்க கவலைப்படுறதில்ல. ஸோ, கமெர்ஷியலா ‘பீஸ்ட்’தான் நம்பர் ஒன். கே.ஜி.எஃப் படத்திற்கான தியேட்டர்களையும் அதிகரிக்க முடியாது. ஏன்னா, ‘பீஸ்ட்’ வசூல் இன்னமும் இருக்கு. பொதுவாகவே முதல் வார வசூல் நல்லா இருந்தா அடுத்த வாரம் கண்டிப்பா ஓட்டுவோம். இது சினிமாவுல இருக்கற நடைமுறைதான். ‘பீஸ்ட்’ முதல் வாரம் நல்ல வசூல்னால, அடுத்த வாரமும் ஓடும். 14 நாள்களுக்கு பிறகுதான் ‘கே.ஜி.எஃப் 2’வை அதிகரிக்கிறதைப் பற்றி யோசிக்க முடியுமே தவிர, அதுக்கு முன்னாடி எந்தத் தியேட்டர்கள்லயும் படத்தை மாத்தவே முடியாது. ஆனா, மல்டிஃபிளக்ஸ் தியேட்டர்கள்ல மட்டும் காட்சிகளை அதிகப்படுத்த முடியும். அதுதான் இப்ப நடக்குது.”

சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டுக்கான மேக்கிங் செலவைவிட சம்பள செலவுதான் அதிகம். கிட்டத்தட்ட தயாரிப்பு செலவின் 90 சதவிகிதத்தை ஹீரோக்கள்தான் ஊதியமாகக் கேட்கிறார்கள்னு நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் `ஆதார்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசியிருக்காரே?

கே.ஜி.எஃப் 2

“இதைத்தான் நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு வர்றேன். ‘கே.ஜி.எஃப் – 2’வில் நான் கேள்விப்பட்ட விஷயத்தை சொல்றேன். அது நூறு கோடி பட்ஜெட் படம். அதுல, படம் முடியட்டும் சம்பளத்தை அப்புறமா பேசிக்கலாம்னு அதோட ஹீரோ யஷ் சொன்னதாகத்தான் கேள்விப்பட்டேன். அப்படி இல்லேனாக்கூட அவருக்கு 15 கோடி சம்பளம் இருக்கலாம். மீதி 85 கோடி மேக்கிங்கிற்குத்தான் செலவு செய்திருக்கிறார்கள். அடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ அதோட மொத்த செலவில் 70 பர்சன்ட் மேக்கிங் செலவு ஆக இருக்கப் போகுது. அதே மாதிரிதான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் செலவும் இருக்கப் போகுது.

‘பொ.செ’யின் பட்ஜெட் ஐநூறு கோடியாக இருந்தா, நானூறு கோடி மேக்கிங்கிற்காக இருக்கப் போகுது. மீதி இருக்கற 100 கோடிதான் நடிகர்கள், டெக்னீஷியன்களோட சம்பளமா இருக்கும். இப்படி இருந்தால்தான் தரமான படங்களா கொடுக்க முடியும். ஆனா, பெரும்பாலான தமிழ்ப் படங்கள்ல எப்படியிருக்குது தெரியுமா? பட்ஜெட் 200 கோடியாக இருந்தால், நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கான சம்பளமே 160 கோடி போயிடுது. அடுத்து 10 கோடி விளம்பர செலவுக்குப் போயிடுது. மீதியிருக்கற 30 கோடியில மொத்த படத்துக்கும் மேக்கிங் செலவு பண்றாங்க. அப்புறம் எப்படி நீங்க குவாலிட்டியா படங்களைக் குடுக்க முடியும்? அருண் பாண்டியன் தயாரிப்பாளராக இருக்கறதால அவருக்கு நிதர்சனமான உண்மை தெரியும். நாங்க தியேட்டர் உரிமையாளர்கள்னால, எங்களால சொல்லத்தான் முடியும். தயாரிப்பாளர்கள்தான் பேசி, மேக்கிங்கிற்கு அதிகம் செலவு செய்யவேண்டும். 100 ரூபாய்ல 80 ரூபாய் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்துக்கே போயிட்டா, மீதி இருக்கற 20 ரூபாய்ல எப்படிப் பிரமாண்டத்தைக் கொடுக்கமுடியும்?”

திருப்பூர் சுப்ரமணியத்தின் முழு பேட்டியையும் இங்கே காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.