மாஸ்கோ:
உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அதிநவீன அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் சர்மட் ஏவுகணையை ரஷியா சோதனை செய்தது.
இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. ஒரு ஏவுகணையில் 10 ஆயுதங்களை பொருத்த முடியும். இந்த ஏவுகணை மூலம் அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்த முடியும்.
சர்மட் ஏவுகணையை ரஷியா 2000-ம் ஆண்டிலேயே உருவாக்கியது. அதில் பல தொழில்நுட்பங்களை புகுத்தி அதிநவீனமாக்கி உள்ளது. அதிவேகத்தில் இந்த ஏவுகணை பாய்ந்து வருவதை கணிக்க முடியாது.
சர்மட் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்றும் உலகிலேயே அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளில் சக்திவாய்ந்த ஏவுகனை இதுதான் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-
ஏவுகணை சோதனை வெற்றி ரஷியாவின் பாதுகாப்பையும், ரஷியாவின் போர் செய்யும் திறனையும் உறுதிபடுத்தும். உலகிலேயே சக்தி வாய்ந்த ஏவுகனை இதுவாகும். ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு ராணுவத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த உண்மையான தனித்துவமான ஆயுதம் நமது ஆயுத படைகளின் போர் திறனை வலுப்படுத்தும். நம் நாட்டை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கும். சர்மட் உலகின் மிக நீண்டதூர இலக்குகளை அழிக்கக்கூடிய மிக சக்தி வாய்ந்தது. உலகின் எந்த இடத்தையும் சென்று தாக்கும் என்று கூறினார்.
உக்ரைன் மீதான போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷிய படைகள் கிட்டத்தட்ட முற்றிலும் தன்வசப்படுத்தி விட்டன. அங்குள்ள சில உக்ரைன் வீரர்கள் சரண் அடைய ரஷியா விதித்த கெடு முடிந்தது. இதனால் கடும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் உருக்காலையில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்கள் உக்ரைன் வீரர்கள் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே மரியுபோல் நகரம் சில மணிநேரங்களில் அல்லது சில நாட்களில் ரஷிய படையிடம் முழுமையாக வீழ்ந்துவிடும் என்று உக்ரைன் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உருக்காலைக்குள் இருக்கும் உக்ரைன் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இதை தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷியாவுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி சிறப்பு சுற்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று உக்ரைன் அதிபரின் உதவியாளரும் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான பொடோலியாக் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உக்ரைனுக்கு மேலும் ராணுவ ஆய்த உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோபைடன் முடிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்…கடனில் மூழ்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: பிரதமர் ஷபாஸ் ஷெரீப் எச்சரிக்கை